என்னதான் உங்களுக்கு பத்து மொழி தெரிந்திருந்தாலும், பேசுவதற்கு டிரெண்டியான விஷயம் வேண்டும். "என்னம்மா கண்ணு, சௌக்கியமா?" இதையையே எல்லா மொழிகளிலும் 10 நிமிஷத்துக்கு கேட்டுகிட்டே இருக்க முடியுமா?
அவ்வப்போது சாக்லேட், ஐஸ்கிரீம் எல்லாம் கொடுக்கவேண்டும். நிஜமா இல்லை வார்த்தையிலேயே. "போன தடவை நீங்க போட்டிருந்த பனாரசி துப்பட்டாவை விட இந்த கோட்டாபட்டி ( சரியா சொல்லனும், பட்டாபட்டி இல்லை) துப்பட்டா நல்லா இருக்கு" என்பது போல சின்ன பாராட்டு.
பேசிக்கொண்டு இருக்கும்போதே அடுத்து என்ன டாபிக் பேசப் போகிறீர்கள் என்று ஒரு 'ஹின்ட்' ஒளித்து வைக்க வேண்டும். ஒருபோதும் அடுத்த வார்த்தையை கூட யூகிக்க முடியாத அளவிற்கு சொற்பிரயோகம் இருக்கவேண்டும்.
எவ்வளவு தான் விஷயம் தெரிந்திருந்தாலும், கேட்டுக்கொண்டு இருப்பவர்க்கு அதைப் பற்றின ஆர்வமும், கொஞ்சமாவது உடன்பாடும் இருக்கணும். ஒரு நாத்திகரிடம் திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் பேசினால் எப்படி?
சொல்ல வருவதை "கண்டேன் சீதையை!" போல சுருக்கமா சொல்லிவிட வேண்டும். "தீபாவளி சீர் கொண்டு வந்தப்போ அன்னபூர்ணால மசால் ரோஸ்ட் சாப்பிட்டோமே, செம்ம சூப்பர்ல!" அர்த்தம் : பொங்கல் சீர் கொடுக்க வந்திருந்த தம்பியிடம், இப்பவும் அன்னபூர்ணாவுக்கே போறோம். ஆனால் அம்மாவிடம் "சீர் கொண்டு வந்தவனுக்கு தலைவாழை இலையில வடை, பாயசத்துடன் விருந்து இல்லம்மா..." என்று போட்டு கொடுப்பதையும் சமாளிக்க தெரியனும்.
எல்லைகளை கரைத்து பேச தெரியவேண்டும். குழந்தைகளிடம் "என் செல்லக்குட்டி ராஜாத்திக்கு/ராஜாவுக்கு" என்பதுபோல மதிப்புக்கூட்டி மகிழ்விக்க வேண்டும். மனைவியை 'அழகான ராட்சசியே'ன்னு சொல்லி ஒரு காஃபியோடே விவாதத்தை ஆரம்பிக்கனும்.
பேச ஆரம்பிக்கும் முன்பே "சுத்தி வளச்சி பேச விரும்பல..." என்று ஒரு வாக்கியத்தை சொல்லிவிட்டு, கோவையிலிருந்து கோவில்பட்டிக்கே அழைத்துச் சென்று முறுக்கு சுற்றினாலும், ஆஆ.... என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் நீங்கள் தான் சுற்றிவளைத்துப் பேச மாட்டீர்களே:))
அவங்களுடைய மனநிலைக்கு ஏற்றார் போல் பேசினால் நன்றாக இருக்கும். சரி, மன நிலையை முன்பே எப்படி கண்டுபிடிப்பது? இருக்கவே இருக்கு ட்விட்டர், ஃபேஸ்புக், கோரா இதிலெல்லாம் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று ஒரு முறை பார்த்துவிட்டு, அந்த தலைப்பிலிருந்து பேச ஆரம்பித்து, இடையிலேயே நம்முடைய தலைப்பிற்கு மடைமாற்றி கொள்ளலாம்.
கேட்பவர் முகத்தில் லேசாக சலிப்பு தட்டுவது போல் உணர்ந்தால் உடனே டாப்பிக்கை மாற்றும் அளவிற்கு சமயோஜிதம் அல்லது "தமிழ்நாட்டுல, மருமகள் முதல்ல வீட்டுக்கு வரும்போது நெல்லு மரக்கால் கையில கொடுத்தே அழைப்போம். குஜராத்-ல எப்படி? என்பது போல கேள்வி கேட்டு உரையாடலை உயிர்ப்பிக்கனும். மலரும் நினைவுகளில் உற்சாகமாகி அப்படியே தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், சுதாரித்து எங்கே "கட்" சொல்லனும்னு உங்களுக்கு தெரியணும்.
நீங்கள் யாரிடம் பேசுகிறீர்களோ, முதலில் அவர் கேட்க தயாராக இருக்கிறாரா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். ச்ச்சும்மா.... உட்கார்ந்து இருப்பது போல் தெரிந்தாலும் 'அப்ரைசல்(appraisal)-ல இந்த கொடுக்க(ன்/கி) என்ன உளரி கொட்டியிருக்கோ தெரியலையே' என்று கவலைப்பட்டு கொண்டு
இருந்தால் என்ன பேசினாலும் சுவாரஸ்யமாக இருக்காது.
இந்த பெரிய ரேடியோ பெட்டி போல தனியே பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
இப்ப சொல்லுங்க…
இந்த டூத்பேஸ்டுல உப்பு இருக்கா? கரியாவது இருக்கா?? நிலக்கரியாவது???