நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

செவ்வாய், 17 ஜனவரி, 2023

துர்நாற்றம்

என்னை பார்த்து தள்ளி நின்றாய்.
என்னுடன் கை குலுக்க பயந்து
குறுகி மறைந்தாய்.
என் பக்கம் வரும்போது
மூக்கைப் பொத்தி விலகி ஓடினாய்.
என் மூச்சுக்காற்று பட்டதாய்
வாசனை திரவியங்களால்
குளியலிட்டாய்.

உன் பாதாள சாக்கடையிலிருந்து
மெல்ல வெளியேறி
பெருமூச்சுடன்
விளிம்பை 
நான் தாண்டியதும்
அள்ளி ஊற்றிய நீரில் 
அடித்துக்கொண்டு போனது 
அனைத்து கழிவுகளும்.

ஆனால்
உன் கண்
உன் மூக்கு
உன் உதடுகள்
உன் உச்சியிலிருந்து
உன் பாதம்வரை
உன்
மனதிலிருந்து பீய்ச்சியடிக்கும்
துர்நாற்றம் 
வாசனை திரவியங்களைத்தாண்டி
சுழன்று வருகிறது
கணந்தோறும்.