ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்
கொல்லும் சொல்லை பேசுவதால் எத்தனை எத்தனை காயங்கள் கசப்புகள் ஏற்படுகின்றன.
கிண்டலும் கேலியும் நக்கலும் நையாண்டியும் செய்து பிறர் மனதைக் காயப்படுத்துவதற்கு என்றே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது.
அது அவர்கள் குணமா அல்லது அவர்கள் இயல்பே அதுதானா என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
மனித மனங்கள் காயப்படுவதைத்தான் அவமானம் என்கிறோம்.
அவமானத்தைச் சிலர் தாங்கிக்கொள்வார்கள் பலரால் அது முடிவதில்லை.
வாழ வழி இல்லையே எனத் தற்கொலை செய்து கொள்ளுபவர்களைவிட என்னை அவமானப் படுத்திவிட்டார்களே என்று மனம் உடைந்து தற்கொலை செய்பவர்கள்தான் அதிகம் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
அவமானம் என்பது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துவிடும். அடுத்தவரின் உண்மையான முகம் நாம் அவமானப்படும்போது மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும்.
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். எமது வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமை படத்தொடங்குகிறார்கள். அநேகமாக அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப்படுத்துகிறார்கள்.
எப்போதும் வாழ்க்கையில் நம்முடைய சுற்றம் தான் நமக்கு எதிரிகள். எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை. எமக்கு அருகில் இருக்கின்றவர்கள் தான் எம்மை அதிகம் அவமானப்படுத்துவார்கள்
அவமானங்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு பக்குவம் வேண்டும். வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள் அவமானத்திற்கு அஞ்சாதீர்கள். அவமானம் ஒரு உரம்,
அவமானங்கள்தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம் கற்றுக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது.
அவமானங்களைத் தன்மானத்தோடு எதிர்கொள்வதே வெகுமானம்தான்