ஒருவரைப் பற்றி பேசுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் இந்த உலகில் பெரும்பாலான பிரச்சினைகள் மறைந்து விடும் - ரொனால்ட் ரீகன்
புறம் பேசுதல் (Gossip). ஒரு போதையாக மாறிவிட்ட காலம் இது. போதைப் பழக்கம், போதைக்கு அடிமையாகி இருப்பவரை மட்டுமின்றி அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிப்பதைப் போல, புறம் பேசுதலும் பேசுபவரை மட்டுமில்லாமல் அவரைச் சுற்றி இருப்போரையும் பாதிக்கிறது.
உலக அளவில் 60 சதவீதம் மக்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் ஏதேனும் பேசுகிறார்கள் என்கிறது மேலை நாட்டு ஆய்வு ஒன்று. மேலும், சிலர் மற்றவர்களைப் பற்றி தாழ்வாக பேசுவது தங்களை உயர்வாக நினைக்கச் செய்யும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
புறம் பேசுதல் காரணங்களில் ஒன்று பொறாமை, மற்றொன்று முக்கியத்துவ உணர்வு இழக்கப்படுவது
நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிடும் தன்மைகொண்டது பொறாமை. தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கும்போது, அவர்மீது பொறாமை ஏற்படுகிறது. அவரிடத்தில் இருக்கும் அந்த ஒன்றோ அதைபோல் வேறு ஒன்றோ கிடைத்தால் அன்றி, பொறாமை போகாது. அல்லது அவர்களிடத்தில் அதைப் பற்றிய மதிப்பு குறைய வேண்டும்.
நாம் இருக்கும் இடத்தில் எப்போதுமே ஓர் முக்கியத்துவ உணர்வைப் பெற விரும்புகிறோம். நண்பர்கள் மத்தியில், சுற்றி இருப்பவர்கள் மத்தியில், 'சிறந்தவர்' என்ற உணர்வைப் பெற விரும்புகிறோம். இந்த உணர்வை எல்லா இடத்திலும் நாம் எதிர்பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்கிறோம். அவ்வாறன நிலை மாறும் போது மற்றவர்கள் குறித்து புறம் பேசுகின்றோம்.
புறம் பேசுதல் என்பது ஒருவரைப் பற்றி தவறாக Negative வாக அவர் இல்லாத போது மற்றவர்களிடம் பேசுவது . ஒருவர் இன்னொருவரைப் பற்றி அவர் இல்லாத போது பேசுகிறார் என்னும்போதே அதன் உண்மைத்துவம் கேள்விக் குறியதாகி விடுறது. அத்துடன் சொல்பவரின் நம்பகத் தன்மையும் இடறுகிறது.
உண்மையில் புறம் பேசு பவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளவே செய்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற எண்ணத் தைத்தான் பிறர் மனதில் விதைக்கிறார்கள்.
மனரீதியாக தன்னம்பிக்கை இல்லாதவர்களும் பிறருடைய கவனத்தை தாங்கள் கவர வேண்டும் என நினைப்பவர்களுமே பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசு வார்கள். புறம் பேசப்படுபவர்களை மட்டுமல்ல பேசுபவர்களையும் கேட் பவர்களையுமே அது மனரீதியாகப் பாதிக்கும்.
குறைகள் இல்லாத மனிதன் உலகில் இல்லை எனும்போது, யார் ஒருவரிடமும் என்ன தவறு இருக்கிறது என்று பார்க்க முனையும் போது நிச்சயமாக ஏதாவது ஒரு தவறுதான் தெரிய வரும். அல்லது ஏதாவது ஒன்றைத் தவறாக எடுக்கத் தோன்றும். ஏனென்றால் ஆழ்மனதின் தன் தேவைக்கு ஏற்ப ஒன்றை அனுமானித்துக் கொள்ளும். நீங்கள் என்ன தேடுகிறீர்களோ அதைத் தான் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் ஆழ்மனதிற்கு நீங்கள் நல்லவற்றைப் பார்க்க பழகிக் கொடுக்கிறிர்களா அல்லது தீயவற்றைப் பார்க்கப் பழகிக் கொடுக்கிறீர்களா என்பதே பிரச்னைக்கும் தீர்வுக்குமான வேறுபாடாக இருக்கிறது.
நீங்கள் ஒருவரைப் பற்றி என்ன பேசுகிறீர்களோ அது முதலில் நீங்கள் யார் என்பதையே பிரதிபலிக்கும். தவிர அது அவருக்கு என்ன விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த விளைவு உங்களிடம் இருந்தே ஆரம்பம் ஆகும். மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது அவர்களுக்கு தரும் மறுமலர்ச்சி அல்ல அது உங்களுக்கே மகிழ்ச்சி தரக் கூடியது. இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி மனதில் நிறையும்.